×

காதலர் தின கொண்டாட்டங்களுக்கு கடல் கடந்து செல்லும் ஓசூர் ரோஜா மலர்கள்

ஓசூர்: ஓசூர் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள், காதலர் தின கொண்டாட்டத்திற்காக கடல் கடந்து செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால், காய்கறி பயிர்கள் மட்டுமின்றி, மலர் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரோஜா பிரதான இடத்தை பிடித்துள்ளது. இப்பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சிறு-குறு விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள், கிறிஸ்துமஸ் -புத்தாண்டு மற்றும் காதலர் தின கொண்டாட்டத்திற்காக, இந்தியாவின் பல நகரங்கள் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டும், ஓசூர் பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடி மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில், காதலர் தின கொண்டாட்டத்திற்கு ஓசூர் பகுதியில் இருந்து ஒரு கோடி மலர்களுக்கு மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிலையில், இந்த ஆண்டு கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஓசூர் ரோஜா மலர்களுக்கு இணையாக, சர்வதேச சந்தையில் கென்யா, எத்தியோப்பியா, சீனா போன்ற நாடுகள் நல்ல தரமான மலர்களை சந்தையில் இறக்குவதால், போட்டி அதிகரித்து காணப்படுகிறது. மேலும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்வதற்கான விமான கட்டணங்கள், ஜிஎஸ்டி வரி ஆகியவை, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதால், ஓசூர் பகுதியில் இருந்து இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கான ரோஜா மலர்கள் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில், காதலர் தின கொண்டாட்டத்திற்காக, கடந்த 15 நாட்களாக ரோஜா அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தோட்டங்களில் ரோஜா மலர்களை தரம் பிரித்து, வெளிநாடு மற்றும் உள்நாட்டின் நகரங்களுக்கு அனுப்புவதற்கான பணிகளை செய்து வருகிறோம். ஓசூர் பகுதியில் மட்டும் 2000 ஏக்கர் ரோஜா தோட்டங்களில், ஒரு நாளைக்கு 40 லட்சம் ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 15 நாட்களில் சுமார் 6 கோடி மலர்கள் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், ரோஜா மலர்கள் மட்டும் 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை, இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மீதமுள்ள 5 கோடி ரோஜா மலர்கள், இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும், உள்ளூர் தேவைக்காகவும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாடு ஏற்றுமதி சரிவை சந்தித்தாலும், இந்திய காதலர்கள் ஓசூர் பகுதி விவசாயிகளுக்கு கை கொடுப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்.

The post காதலர் தின கொண்டாட்டங்களுக்கு கடல் கடந்து செல்லும் ஓசூர் ரோஜா மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Hosur ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது